கம்ப்யூட்டர்கள் இயக்கத்தைப் பொறுத்த வரை, அதன் அடிப்படைகளில் ஒன்றாக, கம்ப்யூட்டர் இயக்கும் பைல் சிஸ்டம் வகை முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு வகை பைல் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்கின்றன. நாம் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் ட்ரைவ், அனைத்து சிஸ்டங்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்றால் FAT32 வகை பைல் சிஸ்டத்தினைக் கொண்டிருந்தால் நல்லது. அந்த ட்ரைவ் மிகவும் பெரியதாக, அதிகக் கொள்ளளவு கொண்டதாக இருந்தால், அதற்கு என்.டி.எப்.எஸ். (NTFS) பைல் சிஸ்டம் தேவைப்படும். மேக் சிஸ்டத்தில் பார்மட் செய்யப்பட்ட ட்ரைவ்களில் HFS+ என்ற பைல் வகை பயன் படுத்தப்படுகிறது. அவை விண்டோஸ் சிஸ்டங்களில் இயங்காது. லினக்ஸ் சிஸ்டம் தனக்கென ஒரு பைல் சிஸ்டத்தைக் கொண்டு இயங்குகிறது. எனவே, ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனாளரும், இந்த பைல் சிஸ்டம் வகைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதுள்ளது. ஒவ்வொன்றும் வேறு எந்த வகை சிஸ்டத்துடன் இணைந்து இயங்கும் என்பதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் இத்தனை வகை பைல் சிஸ்டங்கள் உள்ளன என அதன் அடிப்படைக் கட்டமைப்பினையும் புரிந்து கொள்ள வேண்டியதுள்ளது. இங்கு அவற்றைக் காண்போம்.
பலவகை பைல் சிஸ்டங்கள் ஏன் உள்ளன?
ஹார்ட் ட்ரைவ், ப்ளாஷ் ட்ரை அல்லது எந்த ஸ்டோரேஜ் மீடியாவாக இருந்தாலும், அவற்றில் பல வகைகளில் பைல்கள் வகைப்படுத்தப்பட்டு ஸ்டோர் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஸ்டோரேஜ் மீடியாவும், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிரிவுகளைக் (partitions) கொண்டுள்ளன. ஒவ்வொரு பார்ட்டிஷனும் ஒரு வகை பைல் சிஸ்டத்துடன் பார்மட் செய்யப்பட்டுள்ளன. பார்மட் செய்கையில், அச்செயல்பாடானது, அந்த வகை பைல் சிஸ்டத்தினைக் காலியான நிலையில் அமைக்கிறது.
ஒரு பைல் சிஸ்டம், குறிப்பிட்ட ட்ரைவில் டேட்டாவினைப் பிரித்து தனித்தனி தகவல் துண்டுகளாக அமைக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, இந்த பைல்கள் குறித்த தகவல்களையும், பைலின் பெயர், யார், யார் அந்த பைலைப் பார்க்க அனுமதி பெற்றுள்ளனர் மற்றும் பைல் குறித்த பிற பண்புகளையும் ஸ்டோர் செய்திட ஒரு வழி தருகிறது. இதே பைல் சிஸ்டம், ட்ரைவில் ஸ்டோர் செய்யப்படும் பைல்களுக்கான அட்டவணை ஒன்றையும் தயார் செய்து வைக்கிறது. இதன் மூலமே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அந்த ட்ரைவில் பைலைத் தேடுகையில், தேடல் மிக எளிதான செயலாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு பைல் எளிதாக இடம் அறியப்பட்டு, நமக்குக் கிடைக்கிறது.
நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த பைல் சிஸ்டத்தினைப் புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டிருந்தால் தான், அது பைல் ஒன்றில் உள்ள டேட்டாவினைத் தர முடியும், பைல்களைத் திறக்க முடியும் மற்றும் அதனைத் திருத்தி மீண்டும் ட்ரைவில் பதிய முடியும். உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல் சிஸ்டம் ஒன்றை அறிய இயலாமல் போனால், நீங்கள் அந்த பைல் சிஸ்டத்திற்கான சப்போர்ட் தரும் ட்ரைவர் ஒன்றை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அவ்வாறு இன்ஸ்டால் செய்யவில்லை என்றால், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் அந்த பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்த முடியாது.
அப்படியானால், ஒரே ஒரு பைல் சிஸ்டம் இருக்கலாமே? ஏன் பல இருக்கின்றன? என்ற கேள்விகள் நம் மனதில் எழலாம். அனைத்து பைல் சிஸ்டங்களும் ஒரே தரமானவை அல்ல. வேறுபாடான இந்த பைல் இயக்க முறைகள், வேறுபாடான பல வழிகளில் டேட்டாவினை வகைப் படுத்துகின்றன. சில பைல் சிஸ்டங்கள், மற்றவற்றைக் காட்டிலும், செயல்பாட்டில் வேகத்தைக் கொண்டிருக்கும். சில கூடுதலான பாதுகாப்பினைக் கொண்டிருக்கும். சில மற்றவற்றைக் காட்டிலும் அதிக அளவில் ஸ்டோர் செய்திடக் கூடிய வசதியைப் பெற்றிருக்கும். சில சிஸ்டங்கள் பைல் கெட்டுப் போக வாய்ப்பே இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கம்ப்யூட்டர் பைல்களைக் கொண்டு நாம் மேற்கொள்ளும் பலவகையான செயல்பாடுகளைக் கண்டால், மிகச் சிறந்த்து என ஒரே ஒரு பைல் சிஸ்டத்தினச் சுட்டிக் காட்ட முடியாது என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் தனக்கென ஒரு பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்துகின்றன. ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பவர்களும் இதே பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்துகின்றனர். மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் லினக்ஸ் சார்ந்த அடிப்படைக் கட்டமைப்பினை உருவாக்குபவர்கள் தங்களுக்குச் சொந்தமான பைல் சிஸ்டத்தினையே பயன்படுத்துகின்றனர். புதியதாக வரும் பைல் சிஸ்டங்கள், நிச்சயமாக, முன்னதாக இருந்த பைல் சிஸ்டங்களைக் காட்டிலும் வேகமாக, நிலைத்த தன்மை கொண்டவையாக, அதிகக் கொள்ள்ளவில் டேட்டா ஸ்டோர் செய்யக் கூடியவையாக உள்ளன. இவை கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளன. பைல் சிஸ்டம் ஒன்று உருவாக்கப்படுவது எளிதான செயல் அல்ல. இந்த சிஸ்டம் எப்படி பைல்கள் அமைக்கப்பட வேண்டும், அவை எப்படி வகைப்படுத்தப்பட வேண்டும், அட்டவணைப் படுத்தப்பட வேண்டும் மற்றும் அவை சார்ந்த தகவல்கள் எப்படி, எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதனைக் கொண்டிருக்கின்றன.
பொதுவான சில பைல் சிஸ்டங்கள்
1. FAT32:
இந்த வகை பைல் சிஸ்டம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மிகப் பழைய வகை பைல் சிஸ்டத்தினைச் சேர்ந்ததாகும். கம்ப்யூட்டர்களில் இணைத்து பயன்படுத்திப் பின்னர் எடுத்துச் செல்லக் கூடிய சிறிய அளவிலான மீடியாக்களில், இந்த வகை பைல் சிஸ்டம் இன்னும் பயன்படுத்தப் படுகிறது. மிகப் பெரிய கொள்ள்ளவிலான, 1 TB, மீடியாக்கள் NTFS பைல் சிஸ்டத்தில் பார்மட் செய்யப்பட்டு கிடைக்கின்றன. இந்த வகை பைல் சிஸ்டத்தினை, சிறிய அளவிலான ஸ்டோரேஜ் மீடியாக்களில், அல்லது டிஜிட்டல் கேமராக்கள், செட் டாப் பாக்ஸ்கள், மற்றும் கேம் சாதனங்களில் ஒத்த வகைக்காகவும், என்.டி.எப்.எஸ். வகை சப்போர்ட் செய்யப்படாமல் உள்ள மீடியாக்களிலும், FAT32 பைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.
2. NTFS:
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில் எக்ஸ்பிக்குப் பின்னால், ட்ரைவ் பிரிப்பதற்கு NTFS பைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. வெளியில் இருந்து இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் ட்ரைவ்கள், FAT32 அல்லது NTFS பைல் சிஸ்டத்தால், பார்மட் செய்யப்படுகின்றன.
3. HFS+:
ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர்களில் உள்ளாகவும், வெளியே இணைத்துப் பயன்படுத்தும் ட்ரைவ்களை HFS+ பைல் சிஸ்டம் கொண்டு பிரிக்கின்றன. ஆனால், மேக் சிஸ்டங்கள் வழியாக, FAT32 சிஸ்டத்திலும் எழுதலாம். இதில் NTFS பைல் சிஸ்டத்தில், பைல்களில் எழுத வேண்டும் என்றால், அதற்கான தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்த வேண்டும்.
4. Ext2, Ext3, மற்றும் Ext4:
லினக்ஸ் குறித்துப் பேசுகையில், Ext2, Ext3, மற்றும் Ext4 என்ற பைல் சிஸ்டங்கள் குறித்து கேட்டிருப்பீர்கள். Ext2 என்பது மிகப் பழைய பைல் சிஸ்டம். இந்த பைல் சிஸ்டத்தில் எழுதுகையில், மின் தடை ஏற்பட்டு எழுதுவது நின்று போனால், டேட்டா அனைத்தும் கெட்டுப் போய், மீட்டு எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும். இந்த பிரச்னை இல்லாத வகையில் Ext3 பைல் சிஸ்டம் உருவானது. ஆனால், இதன் செயல் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. Ext4 பைல் சிஸ்டம் அண்மைக் காலத்தில் உருவான நவீன பைல் சிஸ்டமாகும். விரைவாகச் செயல்படக் கூடியது. இப்போது பயன்படுத்தப்படும் அனைத்து லினக்ஸ் சிஸ்டங்களிலும், இதுவே மாறா நிலையில் உள்ள பைல் சிஸ்டமாக உள்ளது. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் FAT32 மற்றும் NTFS பைல் சிஸ்டங்களில் எழுதவும், அதில் அமைந்த டேட்டாவினைப் படிக்கவும் திறன் கொண்டதாகும்.
5. Btrfs — “better file system”:
லினக்ஸ் சிஸ்டத்தின் புதிய பைல் சிஸ்டமாகும். இது இன்னும் வடிவமைக்கப்படும் நிலையிலேயே உள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இது மாறா நிலை பைல் சிஸ்டமாக இல்லை. ஆனால், விரைவில் Ext4 பைல் சிஸ்டம் இடத்தினை இது பிடித்துவிடும். மிக அதிக அளவில், டேட்டாவினை ஸ்டோர் செய்திட இந்த பைல் சிஸ்டம் வழி தரும்.
6. Swap:
லினக்ஸ் சிஸ்டத்தில் இந்த ”Swap” பைல் சிஸ்டம் ஒரு பைல் சிஸ்டமே அல்ல. இதன் அடிப்படையில், ட்ரைவில் பார்ட்டிஷன் உருவாக்கிய பின்னர், இதனை ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்குத் தேவையான போது பயன்படுத்திக் கொள்ளும். இதனால், இதற்கென தனியே ஒரு பார்ட்டிஷனை, லினக்ஸ் சிஸ்டத்தில் உருவாக்க வேண்டியதுள்ளது.
இன்னும் பல பைல் சிஸ்டங்கள் இருந்தாலும், மேலே கூறப்பட்டவையே, பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். அப்போதுதான், ஏன் ஒரு பைலை ஒரு குறிப்பிட்ட சிஸ்டத்தில் படிக்க முடியவில்லை போன்ற கேள்விகளுக்கு, அவர்களே விடை தெரிந்து கொள்வார்கள்
No comments:
Post a Comment