நம் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், பல ஸ்பேம் புரோகிராம்கள், நாம் அறியாமலேயே, நம் அனுமதியின்றியே இயங்கத் தொடங்கி, பின்னணியில் இயங்கியவாறே இருக்கின்றன. startup programs என இவை அழைக்கப்படுகின்றன. இவை நம் கம்ப்யூட்டர் இயக்கத்தின் செயல் வேகத்தினைக் குறைக்கின்றன. இவை இயங்குவது கூட நமக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நாம் புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அதனுடன் ஒட்டிக் கொண்டு இவை கம்ப்யூட்டரை அடைகின்றன. இவற்றை நீக்கினால், நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படுமோ என்று சிலர் தேவையற்ற பயம் கொண்டு, இவற்றுடனேயே செயல்படுகின்றனர். சிலரோ, இவற்றை எப்படி நீக்குவது என்று அறியாமல் உள்ளனர். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இவற்றை எப்படி நீக்குவது எனக் காணலாம்.
1. சிஸ்டம் கான்பிகரேஷன் டூல் (System Configuration Tool):
விண்டோஸ் கீ + R அழுத்தினால், ரன் விண்டோ கிடைக்கும். இதில் msconfig என டைப் செய்து எண்டர் அழுத்தினால், சிஸ்டம் கான்பிகரேஷன் என்னும் விண்டோ கிடைக்கும். இதன் மூலம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதை வரையறை செய்து அமைக்கலாம். இதில் உள்ள Startup டேப் அழுத்தினால், விண்டோஸ் இயக்கம், இயங்கத் தொடங்குகையில், இயங்கத் தொடங்கும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில் Start Menu's Startup போல்டரில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் அடங்கும். இதனைத்தான் நாம் சற்று சீரமைக்க வேண்டியுள்ளது. ஆனால், அதற்கும் முன், இந்த பட்டியலில் இருக்கும் நம் கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான புரோகிராம்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, நம் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கட்டாயம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
2. தேவையற்ற அப்ளிகேஷன்களை முடக்குக:
மேலே சொன்ன பட்டியலை முழுமையாக ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கவும். பின்னர், நமக்குத் தேவை இல்லாத புரோகிராம்கள் என உறுதி செய்யக் கூடியவற்றை நீக்கவும். இதற்கு, இந்த புரோகிராம் முன் உள்ள செக் பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்தால், அந்த டிக் அடையாளம் நீக்கப்படும். இனி, அந்த புரோகிராம், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கத் தொடங்காது. இதனைச் செய்து முடித்தவுடன், ஓகே கிளிக் செய்திடவும். உடன், சிறிய விண்டோ ஒன்று காட்டப்பட்டு, கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடவா அல்லது பின்னர் செய்திடலாமா என்று கேள்வி கேட்டு ஒரு விண்டோ கிடைக்கும். உங்கள் வசதிப்படி, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடலாம்; அல்லது, அந்த வேலையைப் பின் நாளில் வைத்துக் கொள்ளலாம். இதற்கு Restart மற்றும் 'Exit without restart' என்ற ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். உங்கள் முடிவுக்கேற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம்.
3. விண்டோஸ் 8/8.1ல் முடக்கும் செயல்பாடு:
மேலே சொன்ன பணியை எப்படி விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களில் எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் டாஸ்க் மானேஜர் (Task Manager) விண்டோவினை இயக்கத்திற்குக் கொண்டு வரவும். இதற்குCTRL-+SHIFT+ -ESC கீகளை அழுத்தியும் செயல்படலாம். தொடர்ந்து Startup என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டம், இதில் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு அப்ளிகேஷன் என்னவித செயல்பாட்டினை ஏற்படுத்தும் எனக் காட்டும். இந்தப் பட்டியலை அலசி ஆய்வு செய்து, அதிக பாதிப்பு தருகின்ற, தேவைப்படாத புரோகிராம்களைக் கண்டறியலாம். நீக்கப்பட வேண்டிய புரோகிராம் ஒன்றினைத் தேர்வு செய்து, Disableஎன்பதில் கிளிக் செய்திடவும். முன்பு சொல்லியபடி, தேவையற்றது என்று சரியாக முடிவு செய்திடும் புரோகிராம் மீது மட்டும் Disable அமைக்கவும்.
4. சில சேவைகளை முடக்கவும்:
மேலே கூறியபடி செயல்பட்டு, பல புரோகிராம்களை நீக்கிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் வேகம் முன்பு போலவே மிக மெதுவாக இருந்தால், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், தானாகவே தொடங்கும் சில சேவைகளையும் (services) நிறுத்தலாம். இதற்கு அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் System Configuration விண்டோவினைத் திறக்க வேண்டும். (இதற்கு Windows+R அழுத்தி msconfig டைப் செய்து, பின்னர் Enterஅழுத்தவும். பின்னர், இம்முறை Services டேப்பினை அழுத்தவும். இங்கு ஒவ்வொரு சர்வீஸ் அடுத்து, அதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயர் காட்டப்படும். இதில் Microsoft Corporation என்று இருக்கும் இடத்தில் கை வைக்க வேண்டாம். அதே போல, நீங்கள் இன்ஸ்டால் செய்து இயக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயர் கொண்ட சேவை பக்கமும் செல்ல வேண்டாம்.
5. தேவை எனில் மீண்டும்:
மேலே சொன்ன வழிகளில் நீக்கிய எதனையாவது மீண்டும் தேவை என நீங்கள் எண்ணினால், அதனை மீண்டும் எளிதாக இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் அல்லது சேவை பட்டியலில் இணைக்கலாம். குறிப்பிட்ட டேப் அழுத்தி, பின், இவற்றின் பட்டியலை வரிசையாகப் பார்த்து, நீங்கள் மீட்டு இயக்க விரும்பும் புரோகிராமினை டிக் அடித்து சேர்க்கவும். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீக்குவதாயினும், நீக்கியதைச் சேர்ப்பதாயினும், மேலே கூறப்பட்ட வழிமுறைகளை மேற்கொண்ட பின்னர், கம்ப்யூட்டரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்தால் தான், நாம் விரும்பிய செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment